குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் மறியல்
பண்ருட்டி: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக, குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 7:30 மணிவரை தண்ணீர் வராததால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் திருவதிகை பண்ருட்டி– பாலுார் வழி, கடலுார் சாலையில் மரக்கட்டைகளை போட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் பண்ருட்டி– கடலுார் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.