விபத்தில் இறந்த 'டெலிவரி' ஊழியர்களுக்கு தெலுங்கானா அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி

ஹைதராபாத்: நாட்டிலேயே முதன்முறையாக சாலை விபத்தில் உயிரிழந்த பகுதிநேர பணியாளர்கள் மூன்று பேர் குடும்பத்தினருக்கு தெலுங்கானா அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பகுதி நேர பணியாளர்களுக்கான, 'சமூக பாதுகாப்பு மசோதா 2026' சட்டசபையில் சமீபத்தில் நிறைவேறியது.

இந்த மசோதா, 'ஜெப்டோ, பிளிங்கிட், பிளிப்கார்ட், அமேசான்' போன்ற செயலி மூலம் இயங்கும் தனியார் நிறுவனங்களில் சமூகப் பாதுகாப்பற்ற டெலிவரி பணியாளர்களுக்கு காப்பீட்டு வசதியை வழங்க வகை செய்கிறது.

எனினும், இந்த மசோதா, சட்டமாக நடைமுறைக்கு வராததால், காப்பீட்டு வசதி பெற முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், டெலிவரி பணியாளர்கள் மூன்று பேர் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

இதையடுத்து, தெலுங்கானா பகுதிநேர பணியாளர் சங்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாநில அரசிடம் இருந்து உரிய நிதியுதவி பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டது.

இதன்படி, அச்சங்கத்தின் தலைவர் ஷேக் சலாவுதீன் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தெலுங்கானா அரசு சார்பில், உயிரிழந்த மூன்று பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்பட்டது. இதற்கான காசோலையை, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விவேக் வெங்கடசாமி, அக்குடும்பத்தினரிடம் நேற்று அளித்தார்.

இதுகுறித்து தெலுங்கானா பகுதிநேர பணியாளர் சங்கத் தலைவர் ஷேக் சலாவுதீன் கூறுகையில், “பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இதில், மாநில அரசிடம் இருந்து 5 லட்சம் ரூபாயும், அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும் பெற்று தந்துள்ளோம்,” என்றார்.

Advertisement