திருநங்கையர் உரிமைகள் சட்டத்திருத்தம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- டில்லி சிறப்பு நிருபர் -
மத்திய அரசு நிறைவேற்றிய திருநங்கையர் உரிமைகள் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
திருநங்கையருக்கு சுய அடையாள உரிமை தொடர்பாக, 2014-ல் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே சட்டம் இயற்றிய நிலையில், புதிய சட்ட திருத்தத்தை சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டத் திருத்தத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையை எதிர்த்து மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களான மன்வீர் யாதவ் மற்றும் விஸ்வநாத் மைத்தில் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
ஒரு நபர், தன் பாலினத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமையை நீக்கிவிட்டு, மருத்துவக் குழுவின் சான்றிதழைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தை இந்தச் சட்டம் மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இந்தத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவம் - பிரிவு 14, பிரிவு 15 - பாகுபாடற்ற நிலை, பிரிவு 19 - சுதந்திரம் மற்றும் பிரிவு 21 - தனிமனித கண்ணியம் ஆகியவற்றைப் பறிப்பதாக உள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற விதி, தனிமனித ரகசியம் மற்றும் உடல் சுயாட்சியைப் பாதிக்கும். மேலும், இந்தச் சட்டம் திருநங்கையரின் அடையாளத்தையே அழிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு வாதிடப் பட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அரசின் நிலைப்பாட்டை விளக்க அவகாசம் கோரினார். இதையடுத்து, மனு மீது மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மேலும்
-
கூட்டணி மாறியும் 'கை' கூடல: சோகத்தில் தே.மு.தி.க.,வினர்
-
தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!
-
பட்டியலின ஓட்டுகளை த.வெ.க.,வுக்கு அள்ளி தந்த ஆதவ் அர்ஜுனா
-
தி.மு.க., முகவர் மாரடைப்பால் உயிரிழப்பு
-
மீண்டும் வெற்றி பெற்ற 'கருணாநிதி சென்டிமென்ட்'
-
தபால் ஓட்டு எண்ணிக்கையில் வாக்குவாதம்