பீஹாரில் இடிந்து விழுந்தது பாலம் விசாரணைக்கு உத்தரவிட்டது அரசு

பாட்னா: பீஹாரில் கங்கை ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்ததை அடுத்து, உரிய விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பீஹாரின் பகல்பூர் மாவட்டத்தில், பகல்பூர் மற்றும் நவுரகாசியா நகரங்களை இணைக்கும் வகையில், விக்ரம்சீலா சேது மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதை கங்கை ஆற்றின் மேலே 4.7 கி.மீ., நீளத்துக்கு கட்டப்பட்டிருந்த இந்த பாலம், கடந்த 2001ல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. பீஹாரின் இரண்டாவது மிகப்பெரிய பாலம் என்ற பெரு மையையும் இது பெற்றுள்ளது.

கனரக வாகனங்கள் உட்பட நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன.

இந்நிலையில், இந்த பாலத்தின் 133வது துாணில் நேற்று முன்தினம் இரவு 12:50 மணிக்கு திடீரென விரிசல் ஏற்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது.

நள்ளிரவு என்பதால் பாலத்தில் போக்குவரத்து எதுவும் இல்லை. இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, பகல்பூர் மாவட்ட பொதுப் பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விக்ரம்சீலா சேது பாலத்தின் இருபுறமும் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள், முங்கர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

பகல்பூர் - நவுரகாசியா பகுதி மக்கள் இரு பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கங்கையாற்றில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான்கு வழிப்பாலம் நீராவி படகுகள் மற்றும் தோணிகள் இதற்காக பயன் படுத்தப்பட்டுள்ளன.

விபத்து குறித்து பீஹார் பாலம் கட்டுமா னக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் நேற்று கூறுகையில், “விக் ரம்சீலா சேதுவில் அதிக போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, அதற்கு இணையாக நான்கு வழிப்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அது, இந்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்தாண்டு பயன் பாட்டுக்கு வரும்.

''இதற்கிடையே, விக்ரம்சீலா சேதுவின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதால், அது சரிசெய்ய உரிய ஏற்பாடு செய்யப்படும்,” என்றார்.

இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க பொறியியல் குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், இடிந்து விழுந்த பாலத்தின் பாதுகாப்பு சுவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.

அப்போது, சாலை கட்டுமான துறை அமைச்சராக இருந்த திலீப் குமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விரைவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், விக்ரம்சீலா சேது பாலத்தின் அப்பகுதி இடிந்து விழுந்துள்ளது.

Advertisement