கார் - லாரி மோதி விபத்து ஒடிஷாவில் ஐந்து பேர் பலி

ஜஜ்பூர்: ஒடிஷாவில் லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் பலியாகினர்; ஏழு பேர் காயமடைந்தனர்.

ஒடிஷாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தம்பூர் - சஞ்சாயா நகர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் கியோஞ்ர் மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் நேற்று முன்தினம் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் 'பொலிரோ' காரில் நேற்று சொந்த ஊர் திரும்பினர்.

ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தைதாரி - பாராதீப் நெடுஞ்சாலையில் பாரதா சாக் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில், லாரியின் பின்பகுதியில் கார் சிக்கிக் கொண்டது. இந்த கோர விபத்தில், காரில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறை மீட்புப் படையினர், காயமடைந்த ஏழு பேரையும் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் ஒரு சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் வாகனத்துடன் ஓட்டம் பிடித்த நிலையில், அவர் குறித்த விபரங்களை சேகரித்து வரும் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement