தொண்டாமுத்துாரில் மீண்டும் வேலுமணி: கோவையில் 10ல் ஒன்று மட்டும் அ.தி.மு.க.,
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அ.தி.மு.க., கைப்பற்றியிருக்கிறது. அதுவும், தொண்டாமுத்துார் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்று, 5ம் முறையாக எம்.எல்.ஏ., ஆகி உள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை, 2011 முதல் 2021 வரை தொடர்ந்து அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றியதில் முக்கிய பங்காற்றியவர் வேலுமணி.
அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் நிறுத்தப்பட்டார்.
வேலுமணியின் குரு என்றழைக்கப்படும் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜுவின் மகன் சதீஷ், த.வெ.க., வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் பிரிக்கும் ஓட்டு, தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும் என, தி.மு.க.,வினர் நம்பினர்.
இத்தொகுதியில், தொடக்கத்தில் வேலுமணி முன்னிலையில் இருந்தார். 12வது சுற்றில் நிலைமை மாறியது. த.வெ.க., அதிக ஓட்டு பெற ஆரம்பித்தது. 12வது சுற்றில் இருந்து 18வது சுற்று வரை த.வெ.க., சதீஷ் அதிக ஓட்டு பெற்றார்.
இது, த.வெ.க.,வினரை உற்சாகப்படுத்தியது. இருந்தாலும், முதல் 11 சுற்றுகளில் வேலுமணி பெற்ற ஓட்டுகளை விட, த.வெ.க., அதிகமாக பெற்று, முன்னிலைக்கு செல்ல முடியவில்லை.
ஆறுதலாக கடைசி இரண்டு சுற்றுகள் மட்டும் தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் அதிக ஓட்டு பெற்றிருந்தார். இறுதியாக, 93,316 ஓட்டு பெற்று, 14,725 ஓட்டுகள் வித்தியாசத்தில், வேலுமணி வெற்றி பெற்றார்.
த.வெ.க., சதீஷ், 78,591 ஓட்டு பெற்று இரண்டாமிடம் வந்தார். தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன், 75,917 ஓட்டு பெற்றும், மூன்றாம் இடத்துக்கு சென்றார்.
மொத்தமுள்ள, 10 தொகுதிகளில், தொண்டாமுத்துாரில் மட்டும் அ.தி.மு.க., வென்று, 9 தொகுதிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கூட்டணி மாறியும் 'கை' கூடல: சோகத்தில் தே.மு.தி.க.,வினர்
-
தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!
-
பட்டியலின ஓட்டுகளை த.வெ.க.,வுக்கு அள்ளி தந்த ஆதவ் அர்ஜுனா
-
தி.மு.க., முகவர் மாரடைப்பால் உயிரிழப்பு
-
மீண்டும் வெற்றி பெற்ற 'கருணாநிதி சென்டிமென்ட்'
-
தபால் ஓட்டு எண்ணிக்கையில் வாக்குவாதம்