அசாமில் பா.ஜ.,வுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி 82 தொகுதிகளை கைப்பற்றி சாதனை
குவஹாத்தி:அசாம் சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ., கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் 126 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான போடோலாந்து மக்கள் முன்னணி, அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் பத்ரூதீன் அஜ்மல் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக
முன்னணி, அகில் கோகோய் தலைமையிலான ரைஜோர் தளம், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களம் இறங்கின.
ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. ஆரம்பம் முதலே பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன.
பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., 82 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி - 10, அசாம் கண பரிஷத் - 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
அபாரம்
காங்கிரஸ் - 19, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் ரைஜோர் தளம் கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளை கைப்பற்றியுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ஜலுக்பாரி தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோகை விட 83,621 ஓட்டுகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.
அமைச்சர்கள் பீயூஷ் ஹசாரிகா, ரனோஜ் பேகு, அஜந்தா நியோக் மற்றும் அதுல் போரா உட்பட பல அமைச்சர்கள் வெற்றிக் கனியை பறித்துள்ளனர். பா.ஜ.,வை சேர்ந்த நிதி அமைச்சர் அஜந்தா நியோக், கோலாகாட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிதுபன் சைகியாவை, 43,759 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆறாவது முறையாக தொகுதியைத் தக்கவைத்துள்ளார். அசாம் கண பரிஷத் கட்சியை சேர்ந்த விவசாயத் துறை அமைச்சர் அதுல் போரா, ராய்ஜோர் தளம் கட்சியின் ஹரி பிரசாத் சைகியாவை விட, 60,537 ஓட்டுகள் அதிகம் பெற்று, அமோக வெற்றி பெற்றுள்ளார்.
நான்காவது முறையாக களம் இறங்கிய பா.ஜ.,வின் பீயூஷ் ஹசாரிகா, ஜாகிரோட் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புபுல் தாஸை 93,584 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வெற்றிக்கனி
பா.ஜ., மூத்த தலைவரான ஹசாரிகா, 2011-ம் ஆண்டு ராஹா தொகுதியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 2016, 2021 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் ஜாகிரோட் தொகுதியில் தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் புபுல் தாஸ் - 61,545 ஓட்டுகளும், ஹசாரிகா - 1,55,129 ஓட்டுகளும் பெற்றனர்.
தற்போது, நீர் வளம் மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பதவி வகிக்கும் ஹசாரிகா, காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்தவர். அசாமில் சர்பானந்த சோனோவால் தலைமையில் அமைந்த முதல் பா.ஜ., ஆட்சியிலும் ஹசாரிகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதேபோல, போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி தலைவரான சரண் போரோ, 55,000
ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, மஜ்பத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். பா.ஜ.,வின் புவன் காம், மஜூலி தொகுதியில் 35,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரசை தோற்கடித்து தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.
மண்ணை கவ்விய காங்., தலைவர்
அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், ஜோர்ஹாட் சட்டசபை தொகுதியில், பா.ஜ.,விடம் தோல்வியை தழுவினார்.அசாம் மாநிலத்தில் இருந்து 2014, 2019 கலியாபோர் தொகுதியில் இருந்தும், 2024ல் ஜோர்ஹாட் தொகுதியில் இருந்தும் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கோகோய் தற்போது, லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி வகிக்கிறார்.
மாநில அரசியலுக்குள் கால் பதிக்க விரும்பிய கோகோய், ஜோர்ஹாட் சட்டசபை தொகுதியில் பா.ஜ., மூத்த தலைவர் ஹிதேந்திரநாத் கோஸ்வாமியை எதிர்த்து போட்டியிட்டார்.
கோஸ்வாமி - 69,439 ஓட்டுகளும், கவுரவ் கோகோய் 46,257 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். பா.ஜ.,வின் கோஸ்வாமி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜோர்ஹாட் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். ஆனால், தொடர்ந்து மூன்று முறை லோக்சபா தேர்தலில் வென்ற கோகோய், சட்டசபை தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளார்.
காங்., தலைவர்களுக்குமுதல்வர் அழைப்பு
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பா.ஜ., அரசு செய்த மக்கள் நலப் பணிகள் மற்றும் வடகிழக்கு மாநில வளர்ச்சியில் பிரதமர்
நரேந்திர மோடி செலுத்திய தீவிர கவனத்துக்காக, அசாம் மக்கள் பா.ஜ., ஆட்சி தொடர வாய்ப்பு அளித்துள்ளனர்.பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு இது ஒரு வரலாற்று வெற்றி. அசாமில் பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறுவது இதுவே முதல் முறை.
பாடகர் ஜூபின் கார்க் மரணத்தை அரசியலாக்கிய காங்கிரசுக்கு மக்கள் இந்த தேர்தலில்
தண்டனை வழங்கி விட்டனர்.எதிர்க்கட்சியில் ஒன்று அல்லது இரண்டு பேரை தவிர வேறு ஹிந்து எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அசாம் மாநில வளர்ச்சிக்காகவும், வங்கதேச மியாக்களின் ஊடுருவலை எதிர்த்து போராடவும், காங்கிரசில் உள்ள ஹிந்து தலைவர்கள் பா.ஜ.,வில் இணைய வேண்டும். சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை இந்தியா ஒரு ஹிந்து
தேசமாகவே நீடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.