சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வால் கச்சா முந்திரி இறக்குமதி பாதிப்பு

சென்னை: கச்சா முந்திரி உற்பத்தியில் பாதிப்பு, சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இதன் இறக்குமதி பாதிப்படைந்துள்ளதாக, இந்திய முந்திரி சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் செயலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: நாட்டின் முந்திரி தேவை ஆண்டுக்கு 20 முதல் 22 லட்சம் டன். இதில் 6 முதல் 7 லட்சம் டன் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி 13 லட்சம் டன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது 4 முதல் 5 லட்சம் டன் கச்சா முந்திரி இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் 25 சதவீதம்தான் வந்திருக்கிறது.

கச்சா முந்திரியை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் ஐவரி கோஸ்ட், உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு அறுவடை துவங்கிய முதல் ஒரு மாதம் ஏற்றுமதி செய்யவில்லை.

பெனின் என்ற நாடு முந்திரியை சுயமாக பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய முடிவெடுத்திருப்பதால் முந்திரி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. கானாவில் மழையால் உற்பத்தி பாதித்துள்ளது.

அதேபோல் மேற்காசிய போர், சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு ஆகியவற்றால் முந்திரி இறக்குமதி மிகவும் தாமதமடைந்துள்ளது. ஏற்கனவே இறக்குமதி செய்த கச்சா முந்திரியை பதப்படுத்தித்தான் விற்பனை செய்து வருகிறோம்.

தற்போதைக்கு பாதிப்பில்லை என்றாலும் வரும் நாட்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது 1 கிலோ உயர்தர முந்திரி, உள்நாட்டில் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாதிப்புகளால் முந்திரி விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு கூறினார்.


@block_Y@ தற்போது 4 முதல் 5 லட்சம் டன் கச்சா முந்திரி இறக்குமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் 25 சதவீதம்தான் வந்திருக்கிறது. block_Y

Advertisement