மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பா.ஜ., மம்தாவின் 15 ஆண்டு ராஜ்யத்துக்கு முடிவுரை எழுதி சாதனை


கொல்கட்டா:மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., முதன்முறையாக கைப்பற்றி உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின், 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதி, அக்கட்சி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23 மற்றும் 29ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா தொகுதியில் மட்டும், வரும் 21ல் மறு ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே பலத்த போட்டி நிலவியது.
Latest Tamil News

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ., அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. ஆளுங்கட்சியான திரிணமுல் காங்., கடும் பின்னடைவை சந்தித்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு, 148 இடங்கள் தேவை என்ற நிலையில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று பா.ஜ., மாபெரும்

சாதனை படைத்துள்ளது.



ஆளும் திரிணமுல் காங்., 90 இடங்களுக்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலை பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 38 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு வங்கி தற்போது, 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், 48 சதவீதமாக இருந்த திரிணமுல் காங்கிரசின் ஓட்டு வங்கி, 40.94 சதவீதமாக குறைந்துள்ளது.


திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பல அமைச்சர்களும், முக்கிய தலைவர்களும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர். பிரத்யா பாசு, மானஸ் ரஞ்சன் பூனியா, சசி பாஞ்சா, சந்திரா பட்டாச்சார்யா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ''ஓட்டு எண்ணிக்கையில் சதி நடக்கிறது. நாங்கள் முன்னிலை பெற்றுள்ள பல தொகுதிகளின் தரவுகள் வெளியிடப்படவில்லை.


''தொடக்கத்தில் பா.ஜ., முன்னிலை பெறுவது போல ஒரு மாயையை உருவாக்க திட்டமிட்டு

உள்ளனர். பல தொகுதிகளில் ஓட்டு எண்ணிக்கை இன்னும் முடியவில்லை. எனவே, இறுதி முடிவுகள் மாறும்,'' என்றார்.


மம்தா பானர்ஜி எத்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும், மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகி விட்டது. அக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது இதுவே முதன்முறை. 2011 முதல், 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி
யின் ஆட்சிக்கு பா.ஜ., முடிவுரை எழுதி உள்ளது.

மம்தா வீட்டு முன் 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கம்



கொல்கட்டாவில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டின் முன் திரண்ட பா.ஜ.,வினர், 'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்தை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பா.ஜ., தலைமை அலுவலகத்திலும் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தோல்வியால், திரிணமுல் காங்கிரசின் தலைமை அலுவலகம் வெறிச்சோடியது.

ஊர்வலங்களுக்கு தடை



மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் நேற்று கூறியதாவது:
மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை சுமுகமாக நடக்கிறது. இதுவரை எந்த அசம்பாவிதமும் நடக்க
வில்லை. முன்னெச்சரிக்கையாக, மாநிலம் முழுதும் வெற்றி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்
படுகிறது. போலீசாரின் அனுமதி பெற்று, இன்று முதல் வெற்றி ஊர்வலங்களை நடத்தலாம்.

தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய வன்முறைகளை தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தாமரை மலர்ந்தது!




@quote@மேற்கு வங்கத்தில், 'தாமரை' மலர்ந்துள்ளது. இந்த தேர்தல் எப்போதும் நினைவுகூரப்படும். மக்களின் சக்தி வென்றுள்ளது. பா.ஜ.,வின் நல்லாட்சி அரசியல் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தலைவணங்குகிறேன். பா.ஜ.,வுக்கு மிகச்சிறந்த ஆதரவை மக்கள் வழங்கியுள்ளனர். மேற்கு வங்க மக்களின் கனவுகளை நிறைவேற்ற எங்களால் முடிந்தவரை அயராது உழைப்போம். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் பா.ஜ., அரசு பாடுபடும். - நரேந்திர மோடி பிரதமர்quote

Advertisement