கம்பம் தொகுதியில் தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் என்ன

கம்பம்:கம்பம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் த.வெ.க., வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ராவிடம் 751 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தார். ராமகிருஷ்ணன் இதே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ளார். அதில் ஒரு முறை மட்டும் ம.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1984, 2016 தேர்தல்களில் அ.தி.மு.க. வை சேர்ந்த சுப்புராயர், ஜக்கையன், தற்போது முடிந்த தேர்தலில் த.வெ.க.,வை சேர்ந்த ஜெகநாத் மிஸ்ரா ஆகியோரிடம் தோல்வியடைந்துள்ளார்.

தோல்விக்கு காரணம் என்ன :

கட்சியின் உட்கட்டமைப்பு, நிர்வாகிகள் தீவிர பணியால் தி.மு.க., வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் கட்சிக்குள் இருந்த கோஷ்டி பூசல், ஒத்துழைக்காத உள்ளாட்சி பிரதிநிதிகள், வாக்காளர்கள் கவனிப்பிற்காக வழங்கப்பட்டவை சரிவர வினியோகம் செய்யாதது சறுக்கியதற்கான காரணங்கள். தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டுகள் பல இடங்களில் முழுமையாக தி.மு.க., விற்கு எதிராகின.

தொகுதியில் துவக்கத்தில் வேகம் காட்டிய அ.தி.மு.க., பிரசாரம் உள்ளிட்டவற்றை குறைத்து கொண்டது. மேலும் வாக்காளர்கள் கவனிப்பில் சுணங்கியதால் டிபாசிட் இழப்பதற்கும், தி.மு.க., தோல்வியை தழுவவும் காரணமாயிருந்தன. கூட்டணி கட்சியினர் முழுமனதுடன் பணியாற்றினார்களா என தி.மு.க.,வினர் சந்தேகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து ஒரே நபருக்கு வாய்ப்பு வழங்கியது. உட்கட்சி பூசல்கள் தி.மு.க., தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

Advertisement