ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இந்தியர் காயம்

துபாய்: போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்., 28ல் தொடங்கிய போர், அமைதி பேச்சுக்காக கடந்த மாதம் 8 தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமான தாக்குதலை ஈரான் நேற்று நடத்தியது. தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

ஓமன் வளைகுடாவை ஒட்டியுள்ள, ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா நகரத்தில் பெட்ரோலிய தொழில் மண்டலம் அமைந்துள்ளது. இதன் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி அங்கு பணிபுரியும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக புஜைரா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக அபுதாபியில் உள்ள இந்தியத் துாதரகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள துாதரக அதிகாரிகள், அவர்களின் உடல் நலன் குறித்து தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து எமிரேட்ஸ் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளதாவது:

ஈரானில் இருந்து வந்த நான்கு ஏவுகணைகளில் மூன்று ஏவுகணைகள் கடல் எல்லைக்கு மேலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன; ஒன்று கடலில் விழுந்தது. எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொறுத்துக் கொள்ளாது.

சர்வதேச சட்டத்தின்படி, எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கும் உரிமை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்சை குறி வைக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை எனவும் ஈரான் கூறியுள்ளது.

@block_B@ பிரதமர் மோடி கண்டனம்! புஜைராவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், வளைகுடா பிராந்தியத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்கு அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போர் சூழல் குறித்த அவர் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதள பதிவில் மோடி கூறியுள்ளதாவது: மூன்று இந்தியர்கள் காயமடைய காரணமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. உள்கட்டமைப்பு பகுதிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா உறுதியுடனும் ஒற்றுமையாகவும் நிற்கிறது. பேச்சு வாயிலாக அனைத்து பிரச்னைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. நீடித்த பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது இன்றியமையாதது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நம் வெளியுறவுத் துறையும், இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.block_B

@block_B@ புஜைரா குறி வைக்கப்பட்டது ஏன்? எமிரேட்சின் மற்ற நகரங்கள் பாரசீக வளைகுடாவை ஒட்டி அமைந்திருந்தாலும், புஜைரா துறைமுகம் மட்டும் ஓமன் வளைகுடாவை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது. ஈரானால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே இது அமைந்துள்ளதால் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு இது ஒரு முக்கியமான கேந்திரமாக திகழ்கிறது. மேலும், புஜைராவில் எண்ணெய் குழாய் வழித்தடம் மற்றும் பிற பெட்ரோலியம் சார்ந்த நிறுவனங்கள் அமைந்துள்ளதால், ஈரான் இப்பகுதியில் தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.block_B

Advertisement