திராவிட கட்சி வேட்பாளர்களை கலங்கடித்த த.வெ.க., ஓட்டுக்கள்
– நமது நிருபர் –: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எதிர்பாராத அளவிற்கு த.வெ.க., ஓட்டுக்களை பெற்றிருப்பது திராவிட கட்சியினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் த.வெ.க., வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவதாலும், அனுபவமிக்க அரசியல் பிரமுகர்கள் இல்லாததாலும் பிரச்சாரத்தின் போது அக்கட்சி வேட்பாளர்கள் திணறினர். அதற்கேற்றவாறு 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரம் செய்யும் இடங்களில் வரவேற்பு, தாரை, தப்பட்டை, பைக் பேரணி, ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சி, கட்சி தலைவர்கள் மற்றும் பேச்சாளர்களின் பிரசார கூட்டங்கள், வாக்காளர்களுக்கு விட்டமின் என தி.மு.க., – அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செலவு செய்தனர்.
ஆனால், த.வெ.க., வேட்பாளர்கள் அனைத்து கிராமங்களிலும் பிரசாரங்களில் மட்டுமே ஈடுபட்டனர். இவர்களை ஆதரித்து பேசுவதற்காக கட்சி தலைவர்களோ, பேச்சாளர்களோ வரவில்லை. மேலும், திராவிட கட்சிகள் தபால் ஓட்டுக்களை சேகரிப்பதில் கவனம் செலுத்தியதுடன், தேர்தல் தினத்தன்று ஓட்டுச்சாவடிக்கு அருகே பந்தல் அமைத்து ஓட்டளிக்க செல்பவர்களிடம் ஆதரவு திரட்டினர்.
இதுதவிர அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலையில் இருந்து மாலை வரை பூத் ஏஜெண்டுகள் உடனிருந்து தேர்தலை கண்காணித்தனர். இதில், ஒரு சில இடங்களில் மட்டுமே த.வெ.க., வினர் பந்தல் அமைத்திருந்தனர், பெரும்பாலான ஓட்டுச்சாவடிக்குள் பூத் ஏஜெண்டுகள் கூட இல்லை. இதுபோன்ற காரணங்களால் த.வெ.க., கணிசமான ஓட்டுக்களை பெறாது என திராவிட கட்சியினர் நினைத்தனர்.
ஆனால், த.வெ.க., வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுக்கள் திராவிட கட்சி வேட்பாளர்களை கலங்கடிக்கும் வகையில் இருந்தது. தொடர்ந்து 3 முறையாக வெற்றி பெற்று அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் த.வெ.க., வெற்றி பெற்றது திராவிட கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தொகுதியில், 81,132 ஓட்டுக்களை பெற்று (32.50 சதவீதம்) த.வெ.க., வேட்பாளர் அருள்விக்னேஷ் வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி 80,334 ஓட்டுக்களுடன் (32.18 சதவீதம்) இரண்டாமிடத்தையும், வி.சி., வேட்பாளர் மாலதி 77,666 ஓட்டுக்களுடன் (31.11 சதவீதம்) மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
அதேபோல், ரிஷிவந்தியம் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது சுற்று வாரியாக தி.மு.க., வேட்பாளர் பெறும் ஓட்டுக்களை தொடர்ந்தவாறு த.வெ.க.,வின் ஓட்டுக்களும் இருந்தது. ஒரு சில ஓட்டுச்சாவடி மையங்களில் தி.மு.க., – பா.ம.க., வை பின்னுக்கு தள்ளி த.வெ.க., முதலிடம் பிடித்ததால் திராவிட கட்சியினர் கலக்கமடைந்தனர். இறுதியில் 89,711 ஓட்டுக்களை பெற்று (36.65 சதவீதம்) தி.மு.க., வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் முதலிடம் பெற்றார். த.வெ.க., வேட்பாளர் அசோக்குமார் 84,849 ஓட்டுக்களுடன் (34.66 சதவீதம்) இரண்டாமிடமும், பா.ம.க., வேட்பாளர் செழியன் 56,488 ஓட்டுக்களுடன் (23.08) சதவீதம் மூன்றாமிடத்தை பிடித்தனர். தி.மு.க., வசந்தம் கார்த்திகேயன் 4,862 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், சங்கராபுரம் த.வெ.க., வேட்பாளர் ஜெகதீசன் 67,624 ஓட்டுக்களையும்(28.71 சதவீதம்), உளுந்துார்பேட்டை தொகுதி த.வெ.க., வேட்பாளர் சுதாகர் 66,208 ஓட்டுக்கள் (24.43 சதவீதம்) மூன்றாமிடத்தை பிடித்தனர். மாவட்டம் முழுதும் கணிசமான ஓட்டுக்களை பெற்றது மட்டுமின்றி, மாவட்டத்தின் தலைநகராக உள்ள கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் த.வெ.க., வெற்றி பெற்றிருப்பது திராவிட கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது.
மேலும்
-
உத்தரபிரதேசத்தில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; 10 பேர் பரிதாப பலி
-
தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாறுவதை நியாயப்படுத்த முடியாது; சொல்கிறார் திருமா
-
இந்தியாவில் முழுவேகத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள்: பிரதமர் மோடி பெருமிதம்
-
முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்
-
கியூரி பால்கேர் சேவை அறிமுகம்
-
இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்த தவெக; சொல்கிறார் ஸ்டாலின்