கோரைப்புல் வளர்ந்துள்ள புதுகுளம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

ஆதவபாக்கம்: ஆதவபாக்கம் ஊராட்சியில், கோரைப்புல் வளர்ந்துள்ள புதுகுளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவபாக்கம் ஊராட்சியில் உள்ள புதுகுளம், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும், மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடுகளின் தாகத்தை தீர்க்கும் தடாகமாகவும் இருந்து வருகிறது.

கடந்த 2024ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் வளர்ந்துள்ள கோரைப்புற்களால், நீர்பிடிப்பு பகுதி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மழை பெய்தாலும் குளத்தில் சிறிதளவு மட்டுமே மழைநீர் தேங்குகிறது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்பே குளம் வற்றி விடுகிறது. இதனால், மேய்ச்சலுக்கு வரும், ஆடு, மாடுகளின் தாகத்தை தீர்க்க முடியாத சூழல் உள்ளது.

எனவே, கோரைப்புல் அதிகளவில் வளர்ந்து சீரழிந்த நிலையில் உள்ள புதுகுளத்தை துார்வாரி சீரமைக்க ஆதவபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement