இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்த தவெக; சொல்கிறார் ஸ்டாலின்

90

தஞ்சை: சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து விட்டதால் நாம் சோகத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடந்த திமுக நிர்வாகி பூண்டி கலைச்செல்வனின் இல்லத்திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது; ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. தோல்வி, வெற்றி இரண்டையும் சமமாகக் கருதி, பாடுபட்டுக் கொண்டிருப்பவன் தான் திமுக தொண்டன்.

நம்முடைய கட்சி என்பது கட்டமைப்பு கொண்ட கட்சி. எப்போது, பார்லி தேர்தல் முடிந்த பிறகு, நாம் நமது பணிகளை துவங்கி விட்டோம். பூத் கமிட்டி, ஒன்றிணைவோம் வா, எஸ்ஐஆர் பணி, இளைஞரணி, மகளிர் அணி மண்டல மாநாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை நாம் செய்தோம். ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், எந்தப் பணிகளும் செய்யாமல், பூத் கமிட்டி அமைக்கவில்லை, வாக்காளர்களை நியமிக்கவில்லை, பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை ஏஜென்ட் கூட நியமிக்காதவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர். அது தவறில்லை.

சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு பிள்ளைகளை பிரசாரம் செய்ய வைத்து, அவர்களை அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடையே குழந்தைகள் மூலமாக பிரசாரம் நடத்தி, ஒரு திட்டமிட்ட பணி முடிந்து விட்டது.

இனிமேல் உஷாராக இருந்து, அதையும் முறியடிக்கக் கூடிய வகையில் அந்தப் பணியை, நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் தீட்டியுள்ளோம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள்.

எனக்கு இருக்கும் கவலை எல்லாம் இந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியப் பணிகளை தொடர்ந்து இன்னொரு 5 ஆண்டுகள் வாய்ப்புகள் கிடைத்தால், இன்னும் பல பணிகளை மேற்கொண்டிருப்போம். அது தடை பட்டு போய் விட்டது. இன்று நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், திமுகவின் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உரிமையோடு மக்களிடையே எடுத்துச் சொல்லும் வகையில் பணியாற்றுவோம், எனக் கூறினார்.

நம் திட்டங்கள் இருக்கும் வரை நம் ஆட்சி தான். நாம் தான் இப்போதும் ஆட்சியில் இருக்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement