புதுப்பட்டில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம்:புதுப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு ஊராட்சி உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டது.

இங்கு, மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம், கடந்த சில ஆண்டுகளாக, புதுப்பட்டு பகுதியில் செயல்பட்டு வந்தது.

இதில் புதுப்பட்டு, பசும்பூர், பில்லாஞ்சிகுப்பம், சாத்தமை, குன்னவாக்கம், மலைப்பாளையம் மற்றும் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலமாக பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதுப்பட்டு ஊராட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, நெற்களத்தில் பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன், கோடை மழை பெய்ததால், நெல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது.

இதுகுறித்து, கலெக்டர் நேர்முக உதவியாளர் வேளாண்மை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம், விவசாயிகள் பல முறை மனு அளித்தும், எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

எனவே, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுப்பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement