பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

5

புதுடில்லி: பண மூட்டை பதுக்கி வைத்திருந்த வழக்கில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர் தங்கள் அறிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தனர். இது விரைவில் பார்லியில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவர் டில்லியில் தங்கியிருந்த பங்களாவில் கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. அப்போது, அவரது வீட்டில் இருந்த கணக்கில் வராத பணம் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டது.

இது குறித்து விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய விசாரணை குழுவை அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், நீதிபதி வர்மா வீட்டில் கைப்பற்றப்பட்டது முறைகேடாக சம்பாதித்த பணம் என்பது உறுதியானது. இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானம், பார்லியில் கடந்தாண்டு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து வர்மா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த ஆகஸ்ட்டில் மூவர் குழுவை அமைத்தார்.

இதற்கிடையே தன் நீதிபதி பதவியை வர்மா சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் வர்மாவிடம் விசாரணை நடத்திய குழுவினர் தங்கள் அறிக்கையை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தனர். மேலும் இந்த அறிக்கை வரும் ஜூலை 3வது வாரம் துவங்கும் மழைக்கால பார்லி கூட்டத்தொடரில் சமர்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சட்டவல்லுனர்கள் கூறுகையில், 'நீதிபதி வர்மா தன் பதவியை ராஜினாமா செய்து தற்போது சாதாரண நபராக உள்ளார். இதனால் முன்னாள் நீதிபதியை பார்லியால் பதவி நீக்கம் செய்ய முடியாது' என்றனர். மேலும் சிலர், 'அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் பார்லி என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்றனர்.

Advertisement