மலையில் மழை இல்லாததால் ஆற்றில் நீர் வரத்து இல்லை: விவசாயிகள் எதிர்பார்ப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் நகர் பகுதியில் பெய்த மழை மேற்கு தொடர்ச்சி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்து இன்றி காணப்பட்டது. சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பொது மக்கள் தொடர் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

ராஜபாளையம் நகர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார விவசாய தோப்புகளில் (மே 9) மாலை முதல் பெய்த மழையால் ஆற்றில் நீர் வரத்து எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் உற்பத்தியாகும் ஆறு இப்பகுதியை சுற்றி உள்ள பிரதான கண்மாய்கள் நகராட்சிக்கு குடிநீர் சப்ளையாகும் 6-வது மைல் நீர் தேக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது.

கடந்த இரண்டு மாதமாக அதிகரித்த கோடை வெப்பத்தின் காரணமாக நீர் ஆதாரங்கள், விவசாய கிணறுகள், கண்மாய்கள், ஊருணிகள் வறண்ட நிலைக்குச் சென்றன.

இந்நிலையில் (மே 9) ராஜபாளையம் நகர் பகுதி மற்றும் மலைப் பகுதி ஒட்டிய விவசாய நிலங்களிலும் லேசான இடி மின்னலுடன் இரவு முழுவதும் மழை பெய்ததால் விவசாயிகள் ஆற்றில் நீர் வரத்தை எதிர்நோக்கி இருந்தனர்.

ஆனால் நகர் பகுதி, தோப்புகளில் செய்த மழை நீர் பிடிப்பு பகுதிகளில் இல்லாததால் ஆறு வறண்டு காணப்பட்டது. எனவே மலைப்பகுதியில் தொடர் மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மழை காரணமாக ஆற்றில் குளித்து மகிழ வந்த உள்ளூர் வாசிகள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement