பாழான லாஸ்பேட்டை அரசு குடியிருப்புகள் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி
புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளது.
லாஸ்பேட்டையில் அரசு ஊழியர்கள் வசிக்க குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு 1 முதல் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட 616 பிரம்மாண்ட வீடுகள் உள்ளன. இவை இன்றைக்கு பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஆள் அரவமற்று கிடக்கும் இந்த வீடுகளில், இப்போது குடியிருப்பவர்கள் இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது.
பகல் நேரங்களில் அமைதியாகத் தெரியும் இந்தக் குடியிருப்புகள், சூரியன் மறைந்தால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகின்றன. ஜன்னல் கம்பிகள் திருடப்படுவதும், நள்ளிரவில் கும்பலாக அமர்ந்து மது குடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. பொதுப்பணித்துறையின் மெத்தனத்தால், அரசு சொத்துக்கள் இப்போது சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளது.
ஏன் இந்த வீடுகளில் அரசு ஊழியர்கள் குடியேற மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை மிகவும் எளிது என்கின்றனர் அரசு ஊழியர்கள்...
லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் சுவர்கள் பெயர்ந்து விழுகின்றன. அடிப்படை வசதிகள் கானல் நீராகிவிட்டன. ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் வீட்டு வாடகைப்படி மிக அதிகம். ஆனால், அந்தப் பணத்திற்கு ஈடான எந்த வசதியும் இந்தக் குடியிருப்புகளில் இல்லை.
அதிக வாடகை கொடுத்து ஏன் நரகத்தில் வாழ வேண்டும் என நினைக்கும் ஊழியர்கள், 2016-க்குப் பிறகு சாரை சாரையாக வீடுகளைக் காலி செய்துவிட்டுத் தனியார் வீடுகளுக்குத் தஞ்சம்புகுந்து விட்டனர். இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான வருமானம் காற்றில் கரைந்து போகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சொகுசு பங்களாக்களைச் சீரமைக்கப் பொதுப்பணித்துறை கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்துள்ளது. ஆனால், அடித்தட்டு மற்றும் நடுத்தர அரசு ஊழியர்களின் வீடுகளைக் கண்டுகொள்ள ஆள் இல்லை. உயர் அதிகாரிகளுக்கு ஒரு நீதி, உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு நீதியா என்பதே அரசு ஊழியர்களின் ஆக்ரோஷமான கேள்வியாக இருக்கிறது.
ழுதான இந்த வீடுகளை நவீன மயமாக்கி, நியாயமான வாடகையில் ஊழியர்களுக்கு ஒதுக்கினால் மாதந்தோறும் கோடிக்கணக்கான வருமானம் அரசு கஜானாவுக்கு வந்து சேரும்.
அப்படி எவ்வளவு வாடகை வசூலிக்கிறார்கள் சொல்லுவார்களா ?அரசு ஊழியர்களுக்கு மிக குறைந்த வாடகை வசூலிப்பதுதான் வழக்கம்