விஜய் சுனாமி அலையில் சிக்கிய அ.தி.மு.க.,: பழனிசாமி புலம்பல்

5

மதுரை: தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில், 'விஜய் சுனாமி'யில் அ.தி.மு.க., சிக்கியதாக, மாவட்ட செயலர்களிடம் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி புலம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, முதல்வர் விஜய் தலைமையில் ஆட்சியமைத்து உள்ளது. இக்கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கு வகிக்க, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் விருப்பப்பட்டனர்.

ஆனால், பழனிசாமி ஏற்க மறுத்ததால், அ.தி.மு.க.,வில் 'பனிப்போர்' நிலவுகிறது. இந்நிலையில், பெரும்பாலான மாவட்ட செயலர்கள் தன் பக்கம் உள்ளனர் என்பதை தெரியப்படுத்தும் வகையில், அவர்களை சென்னைக்கு பழனிசாமி வரவழைத்து, இன்றைய அரசியல் சூழல் குறித்து புலம்பியுள்ளார்.

அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிலர் கூறியதாவது: தேர்தலில், 'விஜய் ஓட்டுகளை பிரிப்பார். அது, தி.மு.க.,வுக்கு எதிராக அமையும். நாம் தான் ஆட்சி அமைப்போம்' என பழனிசாமி அதீத நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில், த.வெ.க., பெரும்பான்மை இடத்தை நெருங்கி அதிர்ச்சியை கொடுத்தது.

இதுகுறித்து எங்களிடம் பேசிய பழனிசாமி, 'விஜய் எனும் சுனாமி ஒட்டுமொத்தமாக ஓட்டுகளை அள்ளி சென்று விட்டது; கவலைப்பட வேண்டாம். அரசியலில் ஏற்றம், இறக்கம் சகஜம்; முதல்வராக இருந்த ஸ்டாலினே, அவர் தொகுதியில் தோற்று விட்டார். நாம் ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டும்' என்றார்.

மாவட்ட செயலராக உள்ள சில எம்.எல்.ஏ.,க்கள், 'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியில் பங்கெடுத்தால், கட்சியை வலுப்படுத்துவதோடு, தி.மு.க.,வையும் எதிர்கொள்ள முடியும்' என்றனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பழனிசாமி, 'அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நீங்கள் தைரியமூட்டுங்கள்' என எங்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement