கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்னை வரக்கூடாது: அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

6

சென்னை: கோடைக்காலத்தில் தண்ணீர் பிரச்னை வரக்கூடாது என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.

அப்போது விஜய் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கலில் உள்ள இடர்பாடுகளை போர்க்கால அடிப்படையில் களைந்து, லாரிகளின் மூலமாகவும், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், மாற்று ஏற்பாடுகள் செய்தும் சீரான குடிநீர் விநியோகம் செய்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட கலெக்டர்களும் திங்கட்கிழமைதோறும் குடிநீர் விநியோகத்தை ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் எதிர்வரும் மழைக்காலத்தினை கருத்தில் கொண்டு, தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி காலதாமதமின்றி சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தொடங்க வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Advertisement