வீடுகளில் குப்பை சேகரிப்பு பணியை உறுதி செய்ய ஓ.டி.பி., கேட்பதால் தயக்கம்
காரைக்குடி, மே 13-
காரைக்குடி மாநகராட்சியில் வீடுகளில் குப்பை வாங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய பொது மக்களின் அலைபேசிக்கு வரும் ஓ.டி.பி.,யை பணியாளர்கள் கேட்பதால் மக்கள் தயங்குகின்றனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் துாய்மை பாரத இயக்கம் (ஸ்வச் பாரத் மிஷன்) திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை வாங்கும் பணி நடந்து வருகிறது.
காரைக்குடி மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என 250க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்க வேண்டிய காரைக்குடி மாநகரில் பாதி அளவு பணியாளர்கள் மட்டுமே இருப்பதால் தூய்மைப் பணி சவாலாக இருந்து வருகிறது. தூய்மை பணியாளர்கள் 2 நாட்களுக்கு ஒரு முறை சென்று வீடுகள் தோறும் குப்பை சேகரித்து வருகின்றனர். இவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் 3 முதல் 4 நாட்களுக்கு வீடுகளில் குப்பை தேங்கும் சூழல் நிலவி வருகிறது.
தமிழக முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் துாய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பையை பெற்றுக் கொண்டதை உறுதி செய்திட டிஜிட்டல் முறையில் சர்வே பணி நடந்து வருகிறது. காரைக்குடி மாநகராட்சியில் இப்பணியை, டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
வீடு வீடாகச் சென்று அந்தப் பகுதிக்கு வரக்கூடிய துாய்மை பணியாளர்கள் நேரில் வந்து குப்பை சேகரித்தார்களா என்ற விவரத்தை உறுதி செய்ய அலைபேசியில் செயலி ஒன்று மூலம் தகவல் சேகரிக்கின்றனர். இதுபோன்ற தகவலை கேட்கும் போது மக்களின் அலைபேசிக்கு ஓ.டி.பி., ஒன்று அனுப்பப்படுகிறது. அந்த ஓ டி பி யை துாய்மை பணியாளர்கள் தங்களது செயலியில் உறுதிப்படுத்துவர்.
ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் திடீரென்று வீட்டிற்கு வந்து ஓ.டி.பி., கேட்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கமிஷனர் சங்கரன் கூறுகையில்:
காரைக்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் இப்பணி நடந்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் குப்பை முறையாக வாங்கப்படுவதில்லை என்ற புகார் எழுகிறது. வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பை சேகரிக்கப்படுகிறதா என்பதை அறிந்திட இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் நகராட்சி ஊழியர்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
மேலும்
-
கோவிந்தசாமி சிலைக்கு எம்.எல்.ஏ., மாலை அணிவிப்பு
-
பெண்ணிடம் செயின் பறிப்பு போலீஸ் தீவிர விசாரணை
-
சால்வை வேண்டாம், எலுமிச்சம் பழம் போதும் நிர்வாகிகளுக்கு வசந்தம் ‘அட்வைஸ்’
-
போத்துவாய் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
-
ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் உப்பு நீரால் கல் அடைப்பு பாதிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி
-
சூரியன் ஒருபோதும் மறையாது... மறுபடியும் உதிக்கும்; சொல்கிறார் உதயநிதி