விளைநிலம் எடுப்பிற்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: விவசாயிகள் கலெக்டரிம் மனு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அச்சுந்தன்வயல், முதுனாள் கிராம விவசாயிகள் நெடுஞ்சாலை நில எடுப்பிற்கு கூடுதலாக இழப்பீடு வழங்கக் கோரி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். 

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பரமக்குடி இருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக அச்சுந்தன்வயல் கிராமத்தில் விவசாய நிலங்கள் குடியிருப்பு வீடுகளை அகற்றி பணிகள் நடக்கிறது. இதற்குரிய இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாக கூறி விவசாயிகள், மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று அச்சுந்தன்வயல், முதுனாள் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மலைச்சாமி முன்னிலையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  அதில் கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.50 லட்சம் வரை தரவாரியாக இழப்பீடு வழங்க வேண்டும், 

வீட்டுமனை வழங்க வேண்டும். வருவாய் கிராமத்திற்கு உட்பட்டு அங்கு மதிப்பு தொகையில் எது அதிகமோ அதிலிருந்து 4 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜூன் 10 ல் சென்னைக்கு சென்று முதல்வர் விஜயை சந்திக்க முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறினர். ––

Advertisement