நான்கு வழிச்சாலையில் சரிந்த  தடுப்புகள் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் எம்.ஜி.ஆர்., சாலை அருகே நான்கு வழிச்சாலை சந்திப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கும் போது, பஸ்கள் சர்வீஸ் ரோடு வழித்தடத்தை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவை இன்று ஒவ்வொன்றாக சரிந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.

விருதுநகரில் 2024 ஆக. ல் புது பஸ் ஸ்டாண்ட் 30 ஆண்டுகளுக்கு பின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இங்கு வரும் பைபாஸ் ரைடர் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சாலை வழியாக நான்கு வழிச்சாலையில் செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதே நேரம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சிவகாசி பஸ்கள் அங்கிருந்து மீண்டும் ஆத்துப்பாலம் வழியாகவே மீண்டும் சிவகாசி செல்ல அறிவுறுத்தப்பட்டது.

அதையும் மீறி சில பஸ்கள் எம்.ஜி.ஆர்., சாலையை பிடித்து சர்வீஸ் ரோடு வழியாக சென்றதால் பயணிகள் ஆத்துப்பாலம் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலையில் பஸ்கள் குறுக்கே வரும் வழியை அடைத்தனர். பிளாஸ்டிக் பேரிகார்டுகள், கயிறுகள் கட்டி வைக்கப்பட்டன. இதனால் பஸ்கள் செல்லவில்லை. மேலும் இந்த நான்கு வழிச்சாலை சந்திப்பில் தான் வாகனங்கள் குறுக்கே செல்லும் போது அதிகளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

டூவீலர்களை தவிர மற்ற வாகனங்கள் வராததால் விபத்துக்களும் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் நாளடைவில் அந்த பேரிகார்டுகள் சரிந்து விழுவதோடு, கயிறும் பலவீனமாகி தாழ்ந்து விட்டன. எனவே போலீசார் சரிந்த தடுப்புகளை சீரமைக்க வேண்டும். மற்ற வாகனங்கள் குறுக்கே வந்து விபத்து சந்திப்பதை தடுக்க வேண்டும்.

Advertisement