ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க வேண்டாம் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆதவ் அறிவுரை

சென்னை: ''அன்னை சத்யா நகரில், வில்லிவாக்கம் ஏரி திட்டத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்,'' என, வில்லிவாக்கத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஷெனாய் நகரில் அனைத்து துறை ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வில்லிவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா பேசியதாவது:

வில்லிவாக்கம் தொகுதி மக்கள் பிரச்னைகளை தீர்க்க, சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என மூன்று பிரிவாக பிரித்துள்ளோம். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் தருகிறோம். வேலை பளு கொடுக்க மாட்டோம்; என் தலையீடு இருக்காது.

பெண்கள் பாதுகாப்புக்கு இடையூறாக உள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற வேண்டும். வில்லிவாக்கத்தில் போதை புழக்கம், ரவுடிகள் தொல்லை இருக்கிறது. மக்கள் குடிநீர், தெரு விளக்கு, மின்சாரம் தொடர்பாக புகார் அளித்தால், உடனுக்குடன் தீர்வு காணுங்கள்.

அன்னை சத்யா நகரில், 30 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரின் வீடுகளை இடிக்க வேண்டாம். வில்லிவாக்கம் 'ஏரி பார்க்' திட்டம் முக்கியமா, 30 குடும்பங்கள் முக்கியமா என்றால், மக்கள் தான் முக்கியம். மக்கள் பாதிக்காத அளவில், 'கண்ணாடி பாலம் பார்க்' திட்டம் வடிவமைப்பை மாற்ற முடியுமா என, ஆய்வு செய்யுங்கள்.

பெண்களுக்கு தனியாக, வசதியாக கழிப்பறை அமைக்க வேண்டும்; தெருக்களில் மாடுகள் மற்றும் நாய் சுற்றித்தரியும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement