தனியார் நிறுவன ஊழியருக்கு பாலியல் வழக்கில் '4 ஆண்டு'
எண்ணுார்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவொற்றியூர் அடுத்த, எர்ணாவூர், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த 39 வயது பெண், இரு பிள்ளைகள் மற்றும் கணவருடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் அருகில் வசிக்கும், தனியார் நிறுவன ஊழியரான டேவிட், 40, அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தன்னை காதலிக்கவில்லை என்றால், கணவர் மற்றும் பிள்ளைகளை கொன்று விடுவேன் என, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த பெண்ணின் புகாரையடுத்து, 2018, பிப்., மாதம், எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து, டேவிட்டை கைது செய்தனர். இந்த வழக்கு, திருவொற்றியூர் குற்றவியல் துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக், ''பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய டேவிட்டுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்,'' என, தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து டேவிட்டை, எண்ணுார் போலீசார், மீண்டும் சிறையில் அடைத்தனர்.