பல தெருக்கள் அடங்கிய பெயர் பலகை: ஓ.எம்.ஆரில் அமைக்கும் பணி தொடக்கம்

சோழிங்கநல்லுார்: வெளி மாவட்டம், வெளி மாநில மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், ஓ.எம்.ஆரில் இருந்து உட்புற பிரிந்து செல்லும் பகுதிகளில், பல தெருக்களை அடையாளப்படுத்தும் வகையில், பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னையின் முக்கிய சாலையான ஓ.எம்.ஆர்., 23 கி.மீ., நீளம் உடையது. இங்கு, ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விடுதிகள் அதிகளவில் உள்ளன. இதனால், வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, இப்பகுதியில் வசிப்போர் அதிகம்.

ஓ.எம்.ஆரின் கிழக்கு, மேற்கு திசைகளில் அதிக எண்ணிக்கையில் நகர் மற்றும் தெருக்கள் உள்ளன. வெளியூரில் இருந்து வருவோர், ஓ.எம்.ஆரில் இருந்து உட்புற தெருக்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

நீண்ட துாரமுள்ள ஓ.எம்.ஆ., சாலையில் ஒரு தெரு பெயர், இரண்டு மூன்று இடங்களில் இருப்பதால், புதிதாக வருவோர், முகவரி தேடுவோருக்கு சிரமம் ஏற்படுகிறது. உணவு பொருட்கள் டெலிவரி செய்வோருக்கும் சிக்கல் நிலவுகிறது.

அதனால், ஓ.எம்.ஆர்., சாலையில் இருந்து உட்புறம் செல்லும் நகர், தெருக்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், முக்கிய சாலைகள் திரும்பும் இடத்தில், அந்த பகுதியில் உள்ள மொத்த தெருக்கள் அடங்கிய பெயர் பலகை வைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, 195வது வார்டில் பணி துவங்கியது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக ஒரு பெயர் பலகையில், ஒரு தெரு பெயர் தான் இருக்கும். 'கூகுள்' மேல் இருந்தாலும், குறிப்பிட்ட தெருக்களை எளிதில் அடைய, புதிதாக வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர்; நேர விரயமும் அதிகரிக்கிறது.

அதனால், தெருக்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், ஓ.எம்.ஆரில் இருந்து உட்புறம் பிரியும் சாலைகளின் முகப்பு பகுதியில், அந்த சாலையில் உள்ள நகர், தெருக்கள் அடங்கிய பெயர் பலகையை அமைத்து வருகிறோம். மற்ற பகுதிகளுக்கும் அடுத்தடுத்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement