1.6 கோடி ஜாதி சான்றிதழ்களை ஆய்வு செய்ய... உத்தரவு! மேற்கு வங்க புதிய அரசின் அடுத்த அதிரடி

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்த, 15 ஆண்டுகளில் முறைகேடாக ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, அவற்றை மறு ஆய்வு செய்ய புதிய பா.ஜ., அரசு உத்தரவிட்டுள்ளது. தவறாக வழங்கப்பட்ட ஆவணங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், கடந்த 2011 முதல் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த மாதம் இங்குள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பால்டா தொகுதி தவிர மீதமுள்ள தொகுதிகளின் முடிவுகள் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், 207 இடங்களை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. திரிணமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இதன் வாயிலாக, மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய முதல்வராக பா.ஜ.,வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். மேற்கு வங்கத்தில் முதல்வராக பொறுப்பேற்ற முதல் பா.ஜ., தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதையடுத்து, அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

கடந்த 11ம் தேதி நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கு தேவையான நிலத்தை எல்லை பாதுகாப்புப் படைக்கு 45 நாட்களுக்குள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணியை உடனடியாக தொடங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அடுத்ததாக, கல்வித் துறையில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், மாநிலம் முழுதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் 'வந்தே மாதரம்' பாடல் முழுமையாக பாடுவதை கட்டாயமாக்கி முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ்கள் வழங்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அங்கு புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் மம்தா ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து ஜாதி சான்றிதழ்களையும் மறு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து, மாநில பிற்படுத்தப்பட்ட நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2011 முதல் இதுவரை மாநிலம் முழுதும் 1.69 கோடி ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பட்டியல் ஜாதி சான்றிதழ்கள் 1 கோடி அடங்கும். பழங்குடியினருக்கு 21 லட்சம் சான்றிதழ்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 48 லட்சம் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. 'துவாரே சர்க்கார்' என்ற பெயரில் மாவட்டந்தோறும் நடந்த முகாம்கள் வாயிலாக மட்டும், 47.8 லட்சம் ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில், அடுத்த தலைமுறைக்கான ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்பட்ட சில ஜாதி சான்றிதழ்கள் போலியானவை என பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. எனவே, 2011 முதல் வழங்கப்பட்ட அனைத்து ஜாதி சான்றிதழ்களும், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறுசரிபார்ப்பு செய்ய உத்தரவிடப்படுகிறது.

ஏதேனும் சான்றிதழ் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், 'மேற்கு வங்க பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்டம், 1994' மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜாதி சான்றிதழ் மறுசரிபார்ப்பு பணியை மேற்கொள்வதில் ஏதேனும் மெத்தனப்போக்கு காணப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும்.

அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் முடிவில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு ரத்து செய்யப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

@block_B@ திரிணமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் குவியல் குவியலாக ஆதார் அட்டைகள் கொல்கட்டாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள பிதான் நகரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, குவியல் குவியலாக ஆதார் அட்டைகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. சமீபத்தில் பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையிலான மோதல் தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையின் போது, ஏராளமான ஆதார் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதார் அட்டை என திரிணமுல் காங்., தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சோதனைக்கு பின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.block_B

@block_B@ போலீசார் நல வாரியம் கலைப்பு! மேற்கு வங்கத்தில் உள்ள 24 பர்கனாஸ் மாவட்டத்தின் டைமண்ட் ஹார்பர் பகுதியில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அவர் கூறியதாவது: இங்கு, ஏற்கனவே ஆட்சியாளர்களின் சட்டம் நடைமுறையில் இருந்தது. ஆனால், இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. திரிணமுல் காங்கிரசின் துணை அமைப்பாக செயல்பட்டு வந்த போலீசார் நல வாரியம் கலைக்கப்படுகிறது. நல்ல நோக்கத்திற்காக இது தொடங்கப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் அதன் செயல்பாடுகள் மாறிவிட்டன. சட்டவிரோதமாக பணி நீட்டிப்பு செய்வதற்கான இடமாகவே, அது மாறிவிட்டது. பெண் போலீசார் தங்கள் பணி மற்றும் குடும்ப பொறுப்புகளை சமநிலையில் நிர்வகிப்பதற்கு உதவும் வகையில், அவர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமனங்கள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement