இ.சி.ஆர்., கொட்டிவாக்கம் மதுக்கடையை ‘717’ பட்டியலில் உட்படுத்த வேண்டுகோள்

கொட்டிவாக்கம்: முதல்வர் விஜய் உடனடியாக அகற்றப்படும் என அறிவித்துள்ள, 717 மதுபானக் கடைகளில், ஈ.சி.ஆர்., சாலை கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள மதுபானக் கடையும் உட்படுத்த வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பகுதி மக்கள் கூறியதாவது:

ஈ.சி.ஆர்., சாலை போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகும். இந்த சாலையின் கொட்டிவாக்கம் பகுதியில் எண்: 4507 மதுக்கூடத்துடன் ‘டாஸ்மாக்’ மதுக்கடை இயங்கி வருகிறது.

இந்த கடையில் இருந்து, 100 மீ., தொலைவிற்குள், தெருவீதி அம்மன் கோவில்; துலுக்கானத்தம்மன் கோவில்; 10 அடி அருகில் பேருந்து நிறுத்தம்; 60 மீ., அருகில் சிக்னல்; கடையின் எதிரில் தனியார் மனநல காப்பகம்; திருவான்மியூர் நோக்கி செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இக்கடைக்கு வரும் ‘குடி’மகன்கள், பிரதான சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதோடு, விதிமீறி சிக்னலில் இருந்து எதிர் திசையில் வாகனங்களை இயக்குவதால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன.

தவிர, துலக்கானத்தம்மன் கோவில் வாசலில் அமர்ந்து மது அருந்துவதால், கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த கடையை ஒட்டியுள்ள தெருக்களில் 2,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இக்கடைக்கு வரும் போதை ஆசாமிகள், அருவருக்கத்தக்க வகையில், தகாத வார்த்தைகளில் பேசுவதால், தெருவை கடக்கும் பெண்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ –- மாணவியர் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து, நாங்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் கண்டுகொள்வதும் இல்லை, பாதுகாப்பிற்கு ரோந்து பணியிலும் ஈடுபடுவதில்லை.

எனவே, மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த, உடனடியாக மூடப்பட வேண்டிய கடைகளின் பட்டியலில் இந்த கடையை சேர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement