எதிர்பார்ப்புகள் இல்லாததே உண்மையான சேவை 'வாழும் கலை' நிறுவனர் ரவிசங்கர் குருஜி பேச்சு

பெங்களூரு: ''எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் சேவையே உண்மையான சேவை,'' என, 'வாழும் கலை' நிறுவனர் ரவிசங்கர் குருஜி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தில், அதன் 45வது ஆண்டு விழா மற்றும் ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த நிகழ்ச்சியில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், லண்டனில் உள்ள காமன்வெல்த் செயலகத்தின் மூத்த இயக்குநர் சுரேஷ் யாதவ் மற்றும் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் மத்திய இணை அமைச்சர் சஞ்சய் சேத் பேசுகையில், ''இந்திய மண், குருஜி போன்று பல மகான்களை உருவாக்கி உள்ளது. இமயமலை, குகைகளில் மட்டுமே தியானம் செய்வர் என்று மக்கள் நினைத்திருந்தனர்.

''ஆனால் குருஜி, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தியானத்தை கொண்டு சென்றுள்ளார். அன்பு, ஞானத்தின் மூலமே வெறுப்பையும், வன்முறையையும் வெல்ல முடியும் என்பதை வாழும் கலை மூலம் நிரூபித்துள்ளார்,'' என்றார்.

கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசுகையில், '' உலகம் முழுதும் மனிதகுலத்துக்கு சேவை செய்வதற்கான ஒரு தளமாக வாழும் கலை உருவெடுத்து உள்ளது. சுதர்சன் கிரியா மூலம், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் புதிய ஆற்றலை புகுத்தியவர் குருஜி,'' என்றார்.

ரவிசங்கர் குருஜி பேசியதாவது:

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் சேவையே உண்மையான சேவை. என் விழிப்புணர்வு காலத்துக்கு அப்பாற்பட்டது. உடலுக்கு வரம்புகள் உண்டு; ஆனால், ஆன்மா அழியாதது. எனக்குள் இருக்கும் அதே விழிப்புணர்வு ஆற்றல், அனைவருக்குள்ளும் உள்ளது. கடல் நீர் ஒன்றாக இருந்தும், வெவ்வேறு அலைகளாக எழுவது போன்று நாம் அனைவரும் ஒரே விழிப்புணர்வின் வெளிப்பாடுகளே.

அந்த விழிப்புணர்வு நிலையில் நிலைத்திருப்பதே தியானம். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆழமான உணர்வு அதில் உள்ளது.

இவ்வாறு பேசினார்.

Advertisement