சொல்கிறார்கள் –––––––––– சுகாதாரமும் வருமானமும் தரும் ‘வெண்டை’ சாகுபடி

‘அதிக சுவை, நான்கு நாட்கள் வரை வாடிப் போகாமல் இருப்பது உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் கொண்ட வெண்டைக்காயை விளைவித்தால், ஆண்டு முழுதும் நிரந்தர வருமானம் பார்க்கலாம்’ என கூறும், மதுரை மாவட்டம், நல்லபெருமாள்பட்டியை சேர்ந்த அன்னலெட்சுமி:

வெண்டைக்காய் சாகுபடிக்கு சீசன் என்று எதுவும் கிடையாது. தண்ணீர் இருப்பை பொறுத்து, எக்காலத்திலும் விளைவிக்கலாம். 2க்கு 3 அடி அல்லது 2 அடி இடைவெளியில் பாத்தி அமைத்து விதைகளை நட வேண்டும். நெருக்கமாக நடுவதை தடுக்க வேண்டும்.

இடைவெளி விட்டு நடும்போது, செடிகள் படர்ந்து, காய்கள் அதிக அளவில் கிடைக்கும். விதைகள் நடும்போது நிலத்தில் ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்வதுடன், இரண்டரை அடிக்கு ஒரு அடி இடைவெளியில், விதைகளை ஊன்ற வேண்டும்.

விதைத்தவுடன் உயிர் நீரும், அதன்பின் வாரம் ஒரு முறை என நீர் பாய்ச்ச வேண்டும். ஒரு வாரத்தில் முளைக்க துவங்கி விடும். செடிகள் வளர ஆரம்பித்தவுடன், நிலத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்க வேண்டும். 40 நாட்களில் துவங்கி, காய்கள் வளர்ச்சியை பொறுத்து, 90 நாட்கள் வரை பறிக்கலாம்.

சரியான முறையில் ஊட்டச்சத்துகள், நீர் மேலாண்மை, பராமரிப்பு செய்தால் மேலும் ஒரு மாதம் வரை காய்கள் கிடைக்கும். ஒரு ஏக்கரில் பயிரிட்டிருந்தாலும், 50 சென்டில் சுழற்சி முறையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்ய முடியும். 50 சென்ட் நிலத்தில், 500 கிலோ வரை காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ, 15 ரூபாய் வீதம் விற்பனை செய்தால், தினமும், 7,500 ரூபாய் கிடைக்கும்.

இந்த வகையில், ஒரு ஏக்கருக்கு, 70 நாட்களுக்கு மொத்தமாக, 2 லட்சத்து 62,500 ரூபாய் வருமானமாகவும், செலவு போக சராசரியாக, 2 லட்சம் ரூபாய் வரை நிகர லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கிராமம், நகரம் என வேறுபாடின்றி, அனைத்து பகுதிகளிலும் வெண்டை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதிக மருத்துவ பலன்களுடன், வருவாயை அள்ளித்தரும் வெண்டைக்காயை விளைவித்து, நிரந்தர வருமானம் பெறலாம்.

வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் வாயிலாக மலச்சிக்கல், குடல் புற்றுநோய், இதய நோய்கள், நீரிழிவு, எலும்பு தேய்மானம் குணமாகும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பொதுவாகவே, மனித எலும்புகளை சுற்றியுள்ள ஜவ்விற்கு அதிக சத்துக்களை வெண்டைக்காய் வழங்குகிறது.

Advertisement