சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா உறுதி

1

புதுடில்லி: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து, வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


டில்லியில் நடந்த பிஎஸ்எப் நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
செயற்கையாக மக்கள்தொகை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அகதிகள் ஊடுருவது நடக்கிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டறிந்து வெளியேற்றுவோம்.

இந்தியாவின் சர்வதேச எல்லையில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படும்.
அடுத்தாண்டுக்குள், ஸ்மார்ட் எல்லை திட்டத்தின் கீழ், பிஎஸ்எப் அமைப்புக்கு டிரோன், ரேடார்கள் மற்றும் திறன்வாய்ந்த கேமராக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் அளிக்கப்படும்

சட்டவிரோத ஊடுருவல் மற்றும் கால்நடைகள் கடத்தலை தடுக்க போலீசார், மாவட்ட கலெக்டர்கள் உடன் இணைந்து பிஎஸ்எப் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.

ஒரு பிரச்னையை கட்டுப்படுத்துவது என்பது மட்டும் பாதுகாப்பு கிடையாது. அதை வேரோடு அழிப்பதே உண்மையானஅணுகுமுறை. ஊடுருவலை தடுக்க பிஎஸ்எப் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

Advertisement