அரசு அருங்காட்சியகத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி: உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்திற்கு நேற்று ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வருகை தந்து கண்டு களித்தனர்.

ஆண்டுதோறும் மே 18ம் தேதி உலக அருங் காட்சியக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி செயின்ட் லுாயி வீதியில் உள்ள அரசு அருங்காட்சியக நுழைவு வாயிலி ல் வாழைமரங்கள் கட்டப்பட்டு மற்றும் வண்ணக் கோலங்கள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இங்கு அரிக்கமேடு அகழ் வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட ரோமானியப் பேரரசு காலத்து மண்பாண்டங்கள், அரிய வகை மணிகள், சோழர் மற்றும் பல்லவர் காலத்து வெண்கல மற்றும் கல் சிலைகள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து, நேற்று அருங்காட்சியக தினம் என்பதால், புதுச்சேரிக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான பொருட்களை கண்டு களித்தனர். பிரெஞ்சு ஆட்சிக் காலத்து அரிய குதிரை வண்டிகள், பல்லக்குகள் மற்றும் புதுச்சேரியின் பண்டைய கால நாணயங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருங்காட்சி ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement