பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு அழைகழிப்பு திருக்கோவிலுார் நகராட்சியில் மக்கள் அவதி

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்காததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது. அதே போல் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கும் பணியும் நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. எனவே திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் சான்றிதழ்களுக்காக திருக்கோவிலுார் நகராட்சி அலுவலகத்தை அணுக வேண்டியுள்ளது.

குறிப்பாக அரசு மருத்துவமனையில் பிறப்பு மற்றும் இறப்பு நடந்தால் மட்டுமே நேரடியாக மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், வீட்டிலேயே உயிரிழந்தவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பு இறப்பு சான்றிதழ் கேட்டு திருக்கோவிலுார் நகராட்சியில் விண்ணப்பித்த ஏராளமானோருக்கு இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதற்கு காரணம், பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்க கூடிய அதிகாரியான துப்புரவு ஆய்வாளர் பணி மாறுதலில் சென்று விட்டதால், அதற்கான பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை. இதனால், தினசரி ஏராளமான பொதுமக்கள் சான்றிதழ்க்காக நகராட்சி அலுவலகத்தில் அலைந்து திரியும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ் அதிகாரியை நியமனம் செய்து விண்ணப்பித்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement