உத்தரகண்ட் புலிகள் காப்பகத்தில் இரட்டை யானை குட்டிகள் பிறப்பு

நைனிடால்: உத்தரகண்டின் கார்பெட் புலிகள் காப்பகத்தில் இரட்டை குட்டிகளை பெற்றெடுத்த யானையை பார்க்க ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ளது கார்பெட் புலிகள் காப்பகம். இங்கு யானைகளும் காணப்படுகின்றன. கடந்த 12ம் தேதி விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சய் சிம்வால் இங்கு சுற்றி பார்க்க சென்றார்.

அப்போது அவர் எடுத்த புகைப் படத்தில் பெண் யானை ஒன்று இரட்டைக் குட்டிகளுடன் சுற்றித் திரியும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த குட்டிகள் இரண்டும், தாய் யானையும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இரட்டை யானை குட்டிகள் பிறந்தது தொடர்பாக, கார்பெட் தேசிய பூங்காவின் இயக்குநர் சகேத் படோலா கூறியுள்ளதாவது:

கார்பெட் பூங்காவில் 1,200 யானைகள் வாழ்கின்றன. யானைகளின கர்ப்ப காலம் 22 முதல் 24 மாதங்கள். பொதுவாக ஒரு குட்டியை மட்டும் யானைகள் பெற்றெடுக்கும். ஒரு சதவீத அளவுக்கே இரட்டை குட்டிகள் பெற்றெடுக்க வாய்ப்பு அதிகம்.

இ ரு குட்டிகள் பெறுவது என்பது அபூர்வமான நிகழ்வாகும். இரட்டை குட்டிகள் பெற்றெடுத்திருப்பதன் மூலம் இந்த பூங்கா வனவிலங்குகளுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை கொண்டுள்ளது என்பதை உணர்த்து கிறது. இரட்டை குட்டிகளை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணியர் கார்ஜியா சுற்றுலா மண்டலத்திற்கு பெருமளவில் வருகை தருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement