நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை விவசாயிகளிடம் எம்.எல்.ஏ., உறுதி
நதிருவாலங்காடு: ‘‘பாகசாலை கிராமத்தில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, த.வெ.க., – எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது பாகசாலை கிராமம். இங்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பாகசாலை கிராமத்தில் நிர்ணயித்த இலக்கான 10,000 மூட்டை நெல்லை பெற்று விட்டதால், கடந்த வாரம் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.
இதனால், 4,000 மூட்டை நெல்லை சாலையேரங்களிலும், கோவில் வளாகத்திலும் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருந்தனர். நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, எங்களிடம் நெல்லை பெற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் த.வெ.க., – எம்.எல்.ஏ., அருண்குமார், நேற்று பாகசாலை கிராமத்திற்கு வந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், நெல்லின் தரம் மற்றும் ஈரபதத்தை பார்வையிட்டார். “வேளாண் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் தெரிவித்து, உடனே நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன்,” என, எம்.எல்.ஏ., அருண்குமார் தெரிவித்தார்.