வீட்டில் 114 கிலோ குட்கா பதுக்கல் மொத்த வியாபாரிகள் 2 பேர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் வாடகைக்கு வீடு எடுத்து குட்கா பதுக்கி விற்பனை செய்த மொத்த வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் பகுதியில் குட்கா, லாட்டரி, டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி விற்கும் சம்பவம் சில நாட்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை டி.கே.மண்டபம் – கீழத்தாளனுார் பைபாஸ் சாலையில், திருச்செந்துார் கார்டன் எதிரே உள்ள வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 114 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், வீட்டை வாடகை எடுத்து பதுக்கி வைத்து, சுற்றுவட்டார கிராமங்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. வீட்டில் மறைந்திருந்த நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் திருமலை, 28; பிரிவிடையாம்பட்டு ரவி மகன் அஜித், 20; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement