தீராத குறைகள்... மாறுமா நடைமுறைகள்!

திருப்பூர், ஜூன் 23–

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 609 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டர் மனிஷ் நாரணவரே மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கைக்காக துறை அலுவலர்களிடம் அனுப்பி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர்: கடந்த ஐந்து ஆண்டுகளாக மாதம் 5,500 ரூபாய் ஊக்கத்தொகையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த 14 குடும்பங்கள்: பி.ஆண்டிபாளையம் பகுதியில் எங்களுக்கு அரசு வழங்கிய பட்டா இடங்களுக்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அரசு நிலம் மற்றும் வழித்தடத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பொது மனித சமூக சேவை அறக்கட்டளை: திருப்பூர் – தாராபுரம் சாலையில் நடப்பட்டுள்ள கோனோ கார்பஸ் மரக்கன்றுகள் நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன; சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகளுடன் வந்த காங்கயம் தாலுகா பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த பெற்றோர்:

போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் இயக்க வேண்டும்.

திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன்: திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு லஞ்சம் வசூலிக்கப்படுகிறது.

முதலிபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் பக்தர்கள்: இக்கோவில் நிலத்தில் மதுக்கடை கட்டடம் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘குறைதீர்ப்புக்கூட்டத்தில் கூறப்படும் குறைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

––

படங்கள் சிங்கிள் காலத்தில்

Advertisement