குடிக்க தண்ணீர் வந்து இரண்டு மாசமாச்சு! போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

குடிமங்கலம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கோட்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை, மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்டது கோட்டமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு, திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக, திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை; ஊராட்சி நிர்வாகத்தால், உப்பு நீரும் வழங்கவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

‘இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர், குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை; இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போகிறோம்,’ என கிராம மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சி சார்பில், குடிமங்கலம் போலீசில் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தனர்.

போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும், நேற்று காலை மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள், காலிக்குடங்களுடன் கோட்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்னையை கண்டுகொள்ளாத ஊராட்சி மற்றும் அரசுத்துறையினரைக்கண்டித்து கோஷமிட்டனர். நுாற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்டோர், இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் போலீசார், ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, குடிநீருக்காக பல கி.மீ., துாரம் அலையும் நிலை குறித்தும், உப்புத்தண்ணீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம் குறித்தும் மக்கள் சராமரியாக புகார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தரப்பில், ‘கோட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக வாரம் ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வினியோகத்தில் உள்ள பிற பிரச்னைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்பட்டு, குடிநீர் முழுமையாக கிடைக்க செய்யப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர். மா.கம்யூ., கிளைச்செயலாளர் முருகன், ஒன்றிய நிர்வாகிகள் சசிகலா, ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement