பொழுது போக்க பூங்கா இல்லை; வண்டலுாரில் 4 மதுக்கடைகள்

வண்டலுார்:வண்டலுார் ஊராட்சியில், பொழுது போக்க பூங்காக்கள் இல்லை; ஆனால், நான்கு டாஸ்மாக் கடைகள் கனஜோராக இயங்கி வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், வண்டலுார் ஊராட்சி 899.90 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்கு 15 வார்டுகளில், 50000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் வசிப்போர் நடைபயிற்சி செய்ய, குழந்தைகள் விளையாடி மகிழ, பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் வண்டலூரில் நான்கு மதுக்கடைகள் அரசால் இயக்கப்படுகின்றன. இதனால், குடிமகன்கள் அதிகம் உலாவரும் பகுதியாக வண்டலுர் மாறி வருகிறது. குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

பொதுமக்கள் காலை மாலை வேளையில் நடைபயிற்சி செய்ய, குழந்தைகள் விளையாடி மகிழ பூங்கா இல்லை.

வாலாஜாபாத் சாலையில் உள்ள தாங்கல் ஏரியை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைத்து, சுற்றுசூழல் பூங்கா அமைத்து தரும்படி, 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அரசு கண்டுகொள்வது இல்லை.

ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, இங்கு ரயில் பாதை அருகில், வண்டலுார் ஏரி அருகில் தலா இரண்டு மதுக்கடைகளை அரசு அமைத்துள்ளது.

இதில், ரயில்பாதை அருகே உள்ள மதுக்கடை வழியாகவே பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.

விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளதால், மது போதையில் இருக்கும் நபர்கள் மாணவியரை கேலி செய்வது தொடர்கிறது. தவிர, அவ்வழியே, பெண்கள் தனியாக செல்லவும் அச்சப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு மதுக்கடைகள் இயங்கிவரும் ஊராட்சியாகவும், தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகள் இயங்கிவரும் ஊராட்சியாகவும் வண்டலுார் உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. ஆனால், வண்டலுாரில் எந்த கடைகளும் மூடப்படவில்லை.

முதற்கட்டமாக, ரயில் இருப்பு பாதை அருகே, பள்ளி செல்லும் வழியில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement