காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் வீணாக வைக்கப்பட்டிருக்கும் சாலையோர வியாபாரிகளுக்கான உணவு விற்பனை வண்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும், சாலையோர வியாபாரிகளுக்கான உணவு விற்பனை வண்டிகள், மழை, வெயிலில் வீணாகி வருகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சியால், 2022ம் ஆண்டு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், ஆதரவற்றோர், சாலையோரம் வியாபாரம் செய்யும் வகையில் 50 உணவு விற்பனை வண்டிகள் வாங்கப்பட்டன.

இரும்பால் தயாரிக்கப்பட்ட இந்த கடைகள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்யும் வசதியுடனும், வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான ஜன்னல் அமைப்புடனும் உள்ளது.

ஆரம்பத்தில் அண்ணா அரங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த கடைகள், பின், பேருந்து நிலையத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உத்திரமேரூர் பேருந்துகள் நிற்கும் பகுதி மற்றும் கழிப்பறை அருகே இந்த கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளியில் வெயிலும், மழையும் நேரடியாக தாக்குவதால் பல கடைகள் சேதமடைந்து வருகின்றன. இதனால் அரசு நிதியில் வாங்கப்பட்ட பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ''நிதிப் பிரிவின் அனுமதி மற்றும் மாநகராட்சி கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற பின் பயனாளிகளுக்கு கடைகள் வழங்கப்படும்,'' என்றனர்.

Advertisement