மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவது... அவசியம்: கல்வித்துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை ;புதிய அரசிடம் பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி,: புதுச்சேரியில் நலிவடைந்து வரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்திட, கல்வித்துறையை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுச்சேரி அரசு, கல்விக்காக கடந்த நிதி ஆண்டில் 1,032.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக மாணவர்களின் நலனுக்காக இலவச சீருடை, இலவச பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணி, இலவச சைக்கிள், லேப்டாப் வழங்கி வருகிறது.

மேலும், மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு காலை பால், மதியம் முட்டையுடன் உணவு, மாலை சிறுதானிய 'ஸ்நாக்ஸ்' உள்ளிட்டவைகள் வழங்கி வருகிறது. அதேபோன்று, பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட கட்டமைப்புகளையும் மேம்படுத்திவருகிறது.

புரிதல் இல்லை மாணவர்களின் நலன் மற்றும் கட்டமைப்பில் , கவனம் செலுத்தும் அரசு, மாணவர்களின் கற்றல் திறனில் கவனம் செலுத்தாதது பெரும் குறையாக உள்ளது.

குறிப்பாக, அரசு பள்ளிகளில் பின்பற்றப்பட்டு வந்த தமிழக பாடதிட்டம், திடீரென சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்கு, முக்கிய காரணம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கே போதிய புரிதல் இல்லை. அவர்களும் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான நோக்கத்தையும் வளர்த்துக் கொள்ளவில்லை.

மறைந்து போன ஆய்வு பணி ஆசிரியர்களின் இந்த மெத்தன போக்கிற்கு, அதிகாரிகளின் கள ஆய்வு இல்லாமையே. கடந்த காலங்களில் இணை இயக்குநர், முதன்மை கல்வி அதிகாரி, துணை இயக்குனர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்வர்.

இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக முற்றிலுமாக மறைந்துவிட்டது. கள ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள், கள ஆய்விற்கு சென்றால், தவறு செய்யும் ஆசிரியர்களை கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ வேண்டும்.

அதனால், தங்கள் பதவிக்கு ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ என கருதியே ஆய்வு பணியை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.

மூடி மறைப்பு இந்த கள ஆய்வு அதிகாரிகள், தேர்வு முடிவுகளின் உண்மை நிலையை ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்து, ஆகா.. ஓஹோ என தங்களுக்கு தாங்களே பாராட்டிக் கொள்ளும் வகையில், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அறிக்கை வழங்கி வருகின்றனர்.

அவர்களும், அறிக்கையை பார்த்து புலகாங்கிதம் அடைந்து, அறிக்கை கொடுத்த அதிகாரிகளை பாராட்டி வருகின்றனர்.

அப்படிதான், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாணவர்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதம் வெளி வந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவில் புதுச்சேரி மாநில 99.79 சதவீதம் தேர்ச்சி பெற்றதாகவும், இது கடந்தாண்டைவிட 18.54 சதவீதம் அதிகம் எனவும், மொத்தமுள்ள 122 அரசு பள்ளிகளில் 115 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தேர்ச்சி சதவீதம் எல்லாம் சரி. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பெற்ற மதிப்பெண் என்ன என்ற விபரத்தை கல்வித்துறை கள ஆய்வு அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.

13 மார்க் எடுத்தால் பாஸ் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 2 மொழிபாடங்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும் அவற்றுடன் ஒரு விருப்ப பாடம் ஒன்றும் படிக்க வேண்டும். தேர்வில், மொழிப்பாடத்தில் இரண்டிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

மீதியுள்ள 4 பாடங்களில் ஏதேனும் மூன்றில் தேர்ச்சி பெற்றாலோ போதும். ஒவ்வொரு பாடத்திலும் மொத்தம் 100 மதிப்பெண்ணிற்கு 33 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி.

கை கொடுத்த விருப்ப பாடம் இதில், விருப்ப பாடம் தவிர்த்த மற்ற 5 பாடங்களுக்கும் தலா 20 அக மதிப்பெண். இதனை ஆசிரியர்களே வழங்கி விடுவர். மீதமுள்ள 80 மதிப்பெண்ணில் 13 மதிப்பெண் மட்டுமே மாணவர்கள் பெற வேண்டும். அதேபோன்று, விருப்ப பாடத்தில் அக மதிப் பெண் 50. அதனை ஆசிரியர்கள் போட்டுவிடுகின்றனர். மீதமுள்ள 50 மதிப்பெண்ணிற்கு மாணவர் தேர்வு எழுதி அதில், பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும், அக மதிப்பெண்ணிலேயே தேர்ச்சி பெற்றவராகி விடுகிறார்.

இதனால், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், விருப்ப பாடத்தில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டதால், பிரதான (கணிதம், அறிவியல், சமூகஅறிவியல்) பாடங்களில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தாலும், அதனை மூடி மறைத்து சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட விதிமுறைகளை பின்பற்றி 99.79 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிக்கை விடுத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் பெரும்பாலானோர் 33 முதல் 40 சதவீத மதிப் பெண் பெற்று 'பார்டர் பாஸ்' ஆனவர்களே அதிகம். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவீதம் மிக குறைவாகவே உள்ளது.

கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு இந்த விபரங்களை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கள ஆய்வு அதிகாரிகள் தெரியப்படுத்தாமல், மூடி மறைத்து, ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையை சீரழிக்கும் செயலே என கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

எனவே, தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, கல்வித்துறையில் நடைபெறும் இந்த முறைகேடுகளை இந்த கல்வி ஆண்டு துவங்கத்திலேயே கலைந்தெரிந்து, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement