கோவில்களில் தங்கம் இருப்பு; வதந்திகளுக்கு மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

3

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள கோவில் அறக்கட்டளைகள், மத நிறுவனங்கள் வசம் இருக்கும் தங்க இருப்புகளை பணமாக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களால் பல நூற்றாண்டுகளாகச் செலுத்தப்பட்ட காணிக்கைகள் மூலம் 3,000 முதல் 4,000 டன்கள் வரை தங்கம் இருப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. இந்த தங்கம் கோவில்களின் பாதுகாப்பறைகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள கோவில்களின் தங்க இருப்புகளுக்கு பதிலாக, மத்திய அரசு தங்க பத்திரங்களை வழங்க போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த விவகாரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் விவாதத்தையும், பரபரப்பையும் கிளப்பியது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவில்களின் தங்க இருப்புகளுக்கு ஈடாக மத்திய அரசு கோவில்களுக்குத் தங்கப் பத்திரங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கோவில்களின் தங்க இருப்புகளைப் பணமாக்குவதற்கான ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகின்றன.

நாடு முழுவதும் உள்ள கோவில் அறக்கட்டளைகள் அல்லது வேறு ஏதேனும் மத நிறுவனங்கள் வசம் உள்ள தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. இந்த தகவல் ஆதாரமற்றவை. இது போன்ற வதந்திகளை நம்பவோ பரப்பவோ கூடாது.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது தேவையற்ற குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். அரசு திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும், அதிகாரப்பூர்வ பத்திரிகைகள், அரசு இணையதளங்கள் வாயிலாக மட்டும் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement