'பூத் ஏஜென்ட்' கூட நியமிக்க முடியாதவர்கள் 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக வென்று விட்டனர்

33

தஞ்சாவூர்: 'பூத் கமிட்டி, ஓட்டு எண்ணிக்கை ஏஜென்ட் கூட நியமிக்க முடியாதவர்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் சோஷியல் மீடியாக்கள் வாயிலாக ஆட்சிக்கு வந்து விட்டனர்' என, தமிழக வெற்றிக் கழகம் பெற்ற தேர்தல் வெற்றியை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்து விட்டது; இத்தோடு தி.மு.க., கதை முடிந்து விட்டது என்பது போல பலரும் கவிதை பாடுகின்றனர்.

தோல்வியடைந்தாலும், தி.மு.க., 'பீனிக்ஸ் பறவை போல்' கிளம்பி எழும். ஐந்தாண்டு ஆட்சி பொறுப்பில், தமிழக மக்களுக்கு, பல திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. நம் திட்டங்கள் இருக்கிற வரை, திராவிட மாடல் ஆட்சி தான் தமிழகத்தை ஆட்சி செய்யும்.

நம் கட்சி, கட்டமைப்பு கொண்ட கட்சி. பூத் கமிட்டி, ஒன்றிணைவோம் வா, எஸ்.ஐ.ஆர்., பணி, மண்டல மாநாடு என பல்வேறு பணிகளை செய்தோம். ஆனால், எந்த பணிகளும் செய்யாமல், பூத் கமிட்டி மற்றும் பல இடங்களில் ஓட்டு எண்ணிக்கை ஏஜென்ட் கூட நியமிக்காதவர்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளனர்.

சோஷியல் மீடியா வாயிலாக, இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி, ரொம்ப சுலபமாக, சிறு பிள்ளைகளை பிரசாரம் செய்ய வைத்து, அவர்களின் தாத்தா, அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடையே, குழந்தைகள் வாயிலாக பிரசாரம் நடத்தி, ஒரு திட்டமிட்ட பணி முடிந்து விட்டது.

இனிமேல் உஷாராக இருந்து, அதை முறியடிக்கும் வகையில் அந்தப் பணியை, நிறைவேற்ற திட்டங்கள் தீட்டி உள்ளோம். இன்னொரு ஐந்தாண்டு வாய்ப்பு கிடைத்தால், இன்னும் பல பணிகளை மேற்கொண்டிருப்போம், அது தடைபட்டு விட்டது, என்பதே எனக்கு இருக்கும் கவலை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement