கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா? அ.தி.மு.க.,விலிருந்து விலகிய செம்மலை வேதனை
சென்னை: அ.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்து, கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வில் நடக்கும் நிகழ்வுகள் மன வேதனையை உண்டாக்கி விட்டன. இதே மனநிலையில் லட்சக்கணக்கான தொண்டர்களும் இருக்கின்றனர். கட்சியில் நடக்கும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவே உள்ளன.
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா? 'கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா' என்ற உள்மன வேதனை அனைவருக்கும் உள்ளது. 'உட்கட்சி சண்டையால் அ.தி.மு.க., அசிங்கப்படுகிறது' என, ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கி, அரசியலில் நிலையான அங்கீகாரத்தை உருவாக்கி தந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன; தடுக்கப்பட்டன. அவற்றை பற்றி கவலைப்படாமல், தலைமைக்கு கட்டுப்பட்டு பணியாற்றினேன்.
அரசியலில் என்னை ஆளாக்கி, அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்பு கோரி, கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேலத்தில், செம்மலை அளித்த பேட்டி:
நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. என் மகள் வெளிநாட்டில் உள்ளார். என் மன அமைதிக்காக, அங்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளேன். அ.தி.மு.க., பிரச்னையின் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை என்ற அடிப்படையில், கூட்டணி ஆட்சியமைப்பதற்காக அ.தி.மு.க., - தி.மு.க., பேசியிருக்கலாம். அதில், தவறு இல்லை.
அ.தி.மு.க.,வை, விஜய் மதிக்கவே இல்லை. விஜய் மதிக்காத அளவிற்கு, அ.தி.மு.க.,வை வலுவாக காட்ட தவறி விட்டோம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அ.தி.மு.க.,வில் தலைவர்களுக்குள் 'ஈகோ' இருக்கக்கூடாது. முதல்வர் விஜய் ஆட்சி பற்றி தற்போது கருத்து கூற முடியாது. ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில்வெண்டாங்கி ஜோதி மாரியம்மன்
-
வீட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்; சர்ச்சையில் தவெக பெண் எம்எல்ஏ
-
செயற்கை நிறமிகளுக்கு மாற்றாக நுண்ணுயிர் நிறமிகள் உருவாக்கம்
-
முதல்வர் விஜய் போட்டோ வைக்க மறுப்பு; அடம் பிடிக்கிறார் கோவை தி.மு.க., மேயர்
-
மாநிலங்களுக்கு ரூ.90,000 கோடி கடன்: வட்டியின்றி வழங்குகிறது மத்திய அரசு
-
அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்