பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது; ராகுல் பேட்டி

44

லக்னோ: பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது; இதன் முழுப் பாதிப்பையும் சாமானிய மக்கள்தான் சுமக்க நேரிடும் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது:கடந்த சில நாட்களாகவே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது என்னவென்றால், பிரதமர் மோடி மாற்றியமைத்துள்ள பொருளாதாரக் கட்டமைப்பின் விளைவாக, பொருளாதாரத்தில் புயல் வீசப்போகிறது; இதன் முழுப் பாதிப்பையும் சாமானிய மக்கள்தான் சுமக்க நேரிடும்; அதானி மற்றும் அம்பானி ஆகியோருக்குச் சாதகமாக பிரதமர் மோடி உருவாக்கி உள்ள பொருளாதார கட்டமைப்பு நிலைத்து நிற்காது.

இது முழுமையாகச் சரிந்து விழப்போவது உறுதியாகும். உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்களும் மக்களுமே இந்தப் பொருளாதார தாக்கத்தை சந்திக்க வேண்டி இருக்கும்; பொருளாதாரத்தில் வீசப்போகும் புயலால் அதானி, அம்பானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரைப் பாதிக்காது. மாறாக, இது உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் நடத்தி வருபவர்களை கடுமையாகப் பாதிக்கும்.

பல ஆண்டுகளாகக் காணாத வகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிகக் கடினமான ஒரு காலகட்டம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்; ஆனால் அவர் உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement