பிரிட்டனில் 23 வயதில் மேயராக தேர்வு; இந்திய வம்சாவளி இளைஞர் சாதனை

2

லண்டன்: பிரிட்டனில் இளம் வயது மேயராக துஷார் குமார் என்ற 23 வயதான இந்திய வம்சவாளி இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு பிரிட்டனில் உள்ள எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகரத்தின் மேயராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம், பிரிட்டனின் மிக இளைய இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 20 வயதில் தொழிலாளர் கட்சியின் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட துஷார் குமார், கடந்த 2023ம் ஆண்டு எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹம்வுட் நகர சபையில் சேர்ந்தார். துணை மேயராகப் பணியாற்றியுள்ளார்.

கவுன்சிலராக தேர்வு செய்யப்படும் போது, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் துறையில் 2ம் ஆண்டு இளங்கலை படித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு, கவுன்சிலர் பதவியிலிருந்து துணை மேயராகவும், தற்போது நகர சபையின் மிக உயரிய மேயர் பதவிக்கும் அவர் உயர்ந்துள்ளார்.

மேயராக பொறுப்பேற்ற பிறகு துஷார் குமார் வெளியிட்ட அறிக்கை; எல்ஸ்ட்ரீ மற்றும் போர்ஹ'ம்வுட் நகரத்தின் மேயராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். 23 வயதில் பிரிட்டன் வரலாற்றிலேயே மிக இளைய இந்திய வம்சாவளி மேயராகப் பொறுப்பேற்றுள்ளேன். என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் தனது குடும்பத்திற்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ரிஷி சுனக்கைப் போல, எதிர்காலத்தில் பிரிட்டன் பிரதமராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

மேயர் துஷார் குமார் தனது 10 வயது வரை ஹரியானாவின் ரோஹ்தக்கில் வசித்து வந்தார். அதன் பிறகு அவரது பெற்றோர் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தனர். இவரது தாயார் பர்வீன் ராணியும் ஹெர்ட்ஸ்மியர் போரோ கவுன்சிலில் பணியாற்றி வருகிறார். மேலும் அவர் துணை மேயராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement