சோலையாறு அணை நீர்மட்டம்: ஒரே நாளில் 3 அடி உயர்வு
வால்பாறை: தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது.
வால்பாறையில் இந்த ஆண்டு தென்மேற்குப்பருவ மழை கடந்த, 16ம் தேதி முதல் பெய்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், இடியுடன் கூடிய கன மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
சமவெளிப்பகுதியில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், வால்பாறையில் பெய்து வரும் பருவமழையினால், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் (மே 18) 13.65 அடியாக இருந்தது. தொடரும் மழையால் அணையின் நீர்மட்டம் மே 19 காலை, 16.01 அடியாக உயர்ந்தது.
ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் மூன்று அடி உயர்ந்துள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிகபட்சமாக மேல்நீராறில், 30 மி.மீ., மழை பெய்துள்ளது.