தினமலர் செய்தி எதிரொலி: காரமடை நகருக்குள் வந்து செல்லும் பஸ்கள்

காரமடை: காரமடை-தோலம்பாளையம் சாலையில் ரயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டதால், அவ்வழியாக செல்லும் பஸ்கள் வேறு வழியாக சென்றன. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தினமலர் செய்தி எதிரொலியாக பஸ்கள் மீண்டும் நகர் பகுதிக்குள் வந்து செல்கிறது.

காரமடை தோலம்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால், அந்த வழியாக வரும் பஸ்கள், காரமடை நகருக்குள் வராமல் நேரடியாக மேட்டுப்பாளையம் சென்றன. இதனால் காரமடை நகரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், முதியோர் மற்றும் தொழிலாளர்கள் தினமும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை இருந்து வந்தது.

இதையடுத்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பஸ்களை, புதுமேம்பாலம் வழியாக காரமடை நகருக்குள் வந்து, பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்பி, மேட்டுப்பாளையம் செல்லவும், மேட்டுப்பாளையத்தலிருந்து வரும் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் சென்று அதே போல் புது மேம்பாலம் வழியாக மேற்கு பகுதி நோக்கி செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரமடை நகராட்சி கமிஷனர், வருவாய்துறை, காவல்துறை, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பா.ஜ., காரமடை நகராட்சி கவுன்சிலர் விக்னேஷ் மனு அளித்தார்.

இதுகுறித்த செய்தி, தினமலர் நாளிதழில் விரிவாக அண்மையில் வெளியானது. இதன் காரணமாக மே 19 முதல் காரமடை நகருக்குள் தோலம்பாளையம் சாலை வழியாக செல்லும் பஸ் வந்து, பயணிகளை ஏற்றி செல்கிறது. இதற்காக பரிவேட்டை மைதானம் பகுதியில் பஸ்கள் திரும்பி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

----

Advertisement