விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்: தேங்காய் கிலோ ரூ.41க்கு விற்பனை

உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.41க்கும், கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ.139க்கும் விற்பனையானது.

மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு, 3,699 கிலோ எடையுள்ள, 8,220 தேங்காய்களை, 29 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில், 9 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.41க்கும், குறைந்த பட்சமாக, ரூ.35 என சராசரியாக, ரூ.37க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 417 ஆகும்.

அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 15 விவசாயிகள், 49 மூட்டை அளவுள்ள, 1,778 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.

இதில், 9 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக கிலோ ரூ.139க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.118 என, சராசரியாக, ரூ.125க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 2 லட்சத்து, 42 ஆயிரத்து, 340 ஆகும்.

மேலும், 27 மூட்டை அளவுள்ள, 572 கிலோ, தேங்காய் தொட்டியை, 8 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இ-நாம் ஏலத்தில், 9 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் தொட்டி, ரூ.29.15க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.16 ஆயிரத்து, 609 ஆகும், என ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement