இன்று இரவு சென்னை வருகிறார் தமிழக கவர்னர் அர்லேக்கர்; நாளை அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

2

சென்னை: கேரளாவில் இருந்து இன்று (மே 20) இரவு 10.30 மணிக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் சென்னை வருகிறார்.

தமிழகத்தில் தவெக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் தவெக புதிய அரசில் அமைச்சர்களாகினர். அவர்களுக்கான இலாக்காக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க முதல்வர் விஜய் சம்மதம் தெரிவித்தார்.

தவெக தரப்பில் இன்று (மே 20) வெளிப்படையாக அமைச்சரவையில் இடம்பெறுமாறு முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக கவர்னர் அர்லேக்கர் கேரளாவில் உள்ள நிலையில் இன்று (மே 20) இரவு 10.30 மணிக்கு சென்னை வருகிறார். நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

நாளை அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தவெக சார்பில் 10 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது. அதேநேரத்தில் விசிக இடம்பெறுவது குறித்து அக்கட்சி தலைவர் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் தவெக அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற மாட்டார்கள் என்றும் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி யோசிக்கவில்லை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். இடதுசாரிகளின் நிலை ஒன்றுதான்; மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம்; எனவே வெளியில் இருந்து நாங்கள் ஆதரிப்போம் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement